இந்திய தயாரிப்புகள் இடம்பெறுகிற ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி


இந்திய தயாரிப்புகள் இடம்பெறுகிற ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி
x

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் மட்டுமே இடம் பெறுகிற ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

காந்திநகர்,

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் மட்டுமே இடம் பெறுகிற ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி 8 மடங்கு பெருகி இருப்பதாக பெருமிதப்பட்டார்.

ராணுவ தளவாட கண்காட்சி

விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கிற குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் 'டிபென்ஸ்எக்ஸ்போ-22' என்னும் ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த 12-வது ராணுவ தளவாட கண்காட்சி, 'பெருமைக்கான பாதை' என்ற பொருளில் நடத்தப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வடிவமைத்துள்ள உள்நாட்டு பயிற்சி விமானம், 'எச்டிடி-40'-ஐயும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் (இது இந்திய, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளது) தீசா விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொழில்துறை மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மூலம் (ஸ்டார்ட்-அப்) விண்வெளிக் களத்தில் பாதுகாப்புப் படைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்காக, 'மிஷன் டிபன்ஸ் ஸ்பேஸ்' என்ற அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

புதிய இந்தியா

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- சுதந்திரம் அடைந்ததின் நூற்றாண்டை நோக்கி நாடு நடைபோட்டுக்கொண்டிருக்கிற இந்த தருணத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய இந்தியாவை இந்த கண்காட்சி உங்கள் கண்முன்கொண்டு வந்து நிறுத்துகிறது.

இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெற்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் மட்டுமே இடம் பெறுகிற முதல் ராணுவ தளவாட கண்காட்சி இதுதான். இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பூமியில் இருந்து, உலகத்தின் முன் இந்தியா தனது திறனுக்கு எடுத்துக்காட்டை ஏற்படுத்துகிறது.

இந்த கண்காட்சியில் இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய பாதுகாப்புத்துறையுடன் இணைந்து கூட்டாக செயல்படுவோர், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், 100-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) என 1,300 கண்காட்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஒரே கட்டமைப்பில், இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக்கூறுகளை இது வழங்குகிறது. இதுவரையில் இல்லாத வகையில் முதல் முறையாக 400 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

'நம்மை நோக்கி வரும் நட்பு நாடுகள்'

இந்தியா தனது கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறபோது, ஆப்பிரிக்கா தொடங்கி 53 நட்பு நாடுகள் நம்மை நோக்கி வருகின்றன. இந்த கண்காட்சியையொட்டி, 2-வது இந்திய-ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சு வார்த்தை நடக்க இருக்கிறது. இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான உறவு, காலத்தால் நிலைத்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாகும். அது மேலும் ஆழமாகி, காலப்போக்கில் புதிய பரிமாணங்களைத் தொடுகிறது. மகாத்மா காந்தி போன்ற உலகத் தலைவருக்கு குஜராத்தான் பிறப்பிடம். ஆப்பிரிக்கா அவரது கர்ம பூமி. ஆப்பிரிக்காவுடனான இந்தப் பந்தம், இன்னும் இந்திய வெளியுறவுக்கொள்கையில் மையமாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் தடுப்பூசி பற்றி கவலைப்பட்ட காலகட்டத்தில், ஆப்பிரிக்காவில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தியா தடுப்பூசி வழங்கியது.

இந்தியாவில் தயாரிப்போம் என்னும் நமது திட்டம், வெற்றியை எழுதிக்கொண்டிருக்கிறது.

ஏற்றுமதி 8 மடங்கு உயர்வு

நமது ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. நாம் ராணுவ பொருட்களை, தளவாடங்களை உலகின் 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். 2021-22-ம் ஆண்டில் ராணுவ தளவாட ஏற்றுமதி 1.59 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.13 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வரும் காலத்தில், நாங்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதாவது ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.

எதிர்காலத்தில் எந்தவொரு வலுவான நாட்டுக்கும் பாதுகாப்பு என்னவாக இருக்கும் என்பதற்கு விண்வெளி தொழில்நுட்பம், ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இந்தத் துறையில் பல்வேறு சவால்கள் முப்படைகளால் ஆய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை தீர்ப்பதற்கு நாம் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.

'மிஷன் டிபன்ஸ் ஸ்பேஸ்'

'மிஷன் டிபன்ஸ் ஸ்பேஸ்' புத்தாக்கத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, நமது படைகளையும் வலுவாக்கும். மேலும், புதிய, புத்தாக்க தீர்வுகளை வழங்கும்.

இந்தியாவின் தாராளமான விண்வெளி ராஜதந்திரத்தின் புதிய வரையறைகளை விண்வெளி தொழில்நுட்பம் வடிவமைத்து, புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது. பல ஆப்பிரிக்க நாடுகளும், பல சிறிய நாடுகளும் இதன்மூலம் பலன் பெறுகின்றன.

விண்வெளி அறிவியலை இந்தியா 60-க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. தெற்காசிய செயற்கைக்கோள் என்பது இதற்கு பயனுள்ள எடுத்துக்காட்டு ஆகும். அடுத்த ஆண்டுக்குள், இந்தியாவின் செயற்கைக்கோள் தரவுகளுக்கான நிகழ்நேர அணுகலைப் பெறும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள்கூட நமது செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்துகின்றன.

தீசா விமானப்படை தளம்

தீசா விமானப்படைதளத்தை கட்டமைப்பது, நாட்டின் பாதுகாப்புக்கும், இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான சாதனை ஆகும். இந்த விமானப்படை தளம், சர்வதேச எல்லையில் இருந்து 130 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. நமது படைகள் குறிப்பாக தீசாவில் உள்ள இந்திய விமானப்படையை கொண்டு மேற்கு எல்லையில் இருந்து வருகிற எந்தவொரு தவறான செயலுக்கும் சிறப்பாக பதிலளிப்போம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், தீசாவில் ஒரு செயல்பாட்டு தளத்தை உருவாக்க முடிவு எடுத்தோம். நமது படைகளின் இந்த எதிர்பார்ப்பு, இன்று நிறைவேறி இருக்கிறது. இந்த பகுதி, இப்போது நாட்டின் பாதுகாப்புக்கு பயனுள்ள மையமாக ஆகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, 4-வது சுதேசி பட்டியலில் 101 பொருட்களின் பட்டியலை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது அவர், "மேலும் 101 ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் தயாரிப்போம் பட்டியலில் சேர்ந்துள்ளன" என தெரிவித்தார்.


Next Story