வாரணாசியில் வேட்புமனு தாக்கல் கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்தவர் மனு - சுப்ரீம் கோர்ட்டு நிராகரிப்பு


வாரணாசியில் வேட்புமனு தாக்கல் கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்தவர் மனு - சுப்ரீம் கோர்ட்டு நிராகரிப்பு
x
தினத்தந்தி 15 May 2024 8:56 PM IST (Updated: 15 May 2024 9:11 PM IST)
t-max-icont-min-icon

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி தமிழகத்தைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று (14-ந்தேதி) முடிவடைந்தது. வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி, நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி, தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி எஸ்.சி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.மகேந்திரன், "கடந்த 10-ந்தேதி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ரெயிலில் சென்று கொண்டிருந்த அய்யாக்கண்ணு, ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இறக்கி விடப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியே கடைசி நாளில்தான் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் எனவும், வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் அய்யாக்கண்ணு தமிழகத்தில் இருந்து வாரணாசி தொகுதிக்கு வந்து போட்டியிட விரும்புவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், விளம்பரத்திற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story