பி.எப்.ஐ. இயக்கம் உள்பட 8 அமைப்புகளுக்கு தடை பின்னணி என்ன...?


பி.எப்.ஐ. இயக்கம் உள்பட 8 அமைப்புகளுக்கு தடை பின்னணி என்ன...?
x

பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி

பாப்புலர் பிரண்ட் இந்தியாவின் 8 முன்னணி அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 மாநிலங்களில் 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் 60 கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு இன்று அதிரடி தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் அதன் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) உள்ளிட்ட முன்னணி அமைப்புகளை "சட்டவிரோத அமைப்பாக உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) அறிவித்துள்ளது.

மேலும் அதன் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநில அரசுகள் பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய பரிந்துரைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உடனடியாக தடை விதிக்கப்படாவிட்டால், அந்த அமைப்பு தனது நாசகார நடவடிக்கைகளைத் தொடரும், பொது ஒழுங்கை சீர்குலைக்கும் மற்றும் நாட்டின் அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

மேலும் பயங்கரவாத அடிப்படையிலான பிற்போக்குத்தனமான ஆட்சியை ஊக்குவித்தல் மற்றும் செயல்படுத்துதல்;

நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்தல். தேசத்திற்கு எதிரான அதிருப்தியை உருவாக்கும் நோக்கத்துடன், தேசவிரோத உணர்வுகளை தொடர்ந்து பரப்புவது மற்றும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை தீவிரமயமாக்குவது ஆகும்.

பிஎப்ஐ உறுப்பினர்களில் சிலர் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) தலைவர்கள் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்காளதேசம் (ஜேஎம்பி) உடன் தொடர்பு கொண்டுள்ளனர்.இவை இரண்டும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாகும்.

இந்த குழுவுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்றதாகவும் கூறி உள்ளது.

பிஎப்ஐ மற்றும் அதன் கூட்டாளிகள் "ஒரு சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக வெளிப்படையாகச் செயல்படுகின்றனர். ஆனால், அவர்கள் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தீவிரமயமாக்கும் ஒரு ரகசிய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி, செயல்படுகின்றனர்.

சஞ்சித் (கேரளா, நவம்பர் 2021), வி. ராமலிங்கம், (தமிழ்நாடு, 2019), நந்து, (கேரளா, 2021), அபிமன்யு (கேரளா) சரத் (கர்நாடகா, 2017), ஆர். ருத்ரேஷ் (கர்நாடகா, 2016), பிரவீன் பூஜாரி (கர்நாடகா, 2016), சசி குமார் (தமிழ்நாடு, 2016) மற்றும் பிரவீன் நெட்டாரு (கர்நாடகா, 2022).

உள்ளிட்ட பலரின் கொலைகளிலும், பல பயங்கரவாதச் செயல்களிலும், பிஎப்ஐ உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள கொலைக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அல்லது பிற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1990களுக்கு பிந்தைய அரசியல் சூழ்நிலைகளால் உருவானது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரை, பாபர் மசூதி இடிப்பு ஆகிய சூழ்நிலைகள் பிஎப்ஐ இயக்கம் உருவாக அடிப்படை காரணமாக இருந்தது.

1992: கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் சேவா சங்கம்) என்ற இயக்கத்தை உருவாக்கினர்.பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்ததால் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

1992: தேசிய வளர்ச்சி முன்னணி என்ற இஸ்லாமிய அமைப்பு உருவானது(என்டிஎப்)

1993: தேசிய வளர்ச்சி முன்னணி உருவாக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

1997: கேரளாவில் பிரம்மாண்டமான மனித உரிமை மாநாடு நடத்தப்பட்டது

2007: பெங்களூருவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு உருவானது.என்.டி.எப், தமிழகத்தின் மனித நீதி பாசறை, கர்நாடகாவின் கேஎப்டி ஆகியவை இணைந்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை உருவாக்கின.

2009: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சியாக எஸ்.டி.பி.ஐஉதயமானது.

என்.சி.எச்.ஆர்.ஓ. என்ற மனித உரிமை இயக்கத்திலும் பி.எப்.ஐ. நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டனர்.

2013, 2018 தேர்தல்களில் கர்நாடகாவிலும் 2016-ல் தமிழகத்திலும் எஸ்டிபிஐ போட்டியிட்டது.

2012: கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சத்வீத இடஒதுக்கீடு கோரி நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை நடத்தியது.

பிஎப்ஐ 2014: கேரளா ஐகோர்ட்டில் அம்மாநில அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பிஎப்ஐ, 27 அரசியல் படுகொலைகள்- 86 கொலை முயற்சிகள், 125 மத மோதல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தது.

2019: நாடு முழுவதும் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் பிஎப்ஐ இருந்ததாக கூறப்பட்டது.

2019: தமிழகத்தில் மதமாற்றத்தை தடுத்ததால் பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்

2019: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டது.

2020: ஆப்கானிஸ்தானில் குருத்வாரா மீதான தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி கேரளாவை சேர்ந்தவர், பிஎப்ஐ இயக்கத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகின.

2022 மே: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆபத்தான இயக்கம் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

2022 செப்டம்பர்: நாடு முழுவதும் பிஎப்ஐ இயக்க நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி சோதனை நடைபெற்றது.இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

2022 செப்டம்பர் 28: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என அறிவித்து 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு.


Next Story