பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு: ஏழைகளின் நலன் கருதி பிரதமர் மோடி நடவடிக்கை சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி
ஏழை மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு
நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர்ந்ததை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. மேலும் சமையல் கியாஸ் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது. இதன்மூலம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் ரூ.7-ம் குறைந்தது. மேலும், உஜ்வாலா திட்ட கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வரவேற்பு
பெட்ரோல், டீசல் விலை குறைக்கு சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோல்-டீல் மீதான வரியை குறைத்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரே முறையில் இவ்வளவு விலை குறைப்பு எப்போதும் நடக்கவில்லை. ஏழை மக்களின் நலன் கருதி பிரதமர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.