ஒரே வீட்டை 3 பேருக்கு விற்ற கில்லாடி நபர்... புகார் அளித்தவரையே கைது செய்த அவலம்


ஒரே வீட்டை 3 பேருக்கு விற்ற கில்லாடி நபர்... புகார் அளித்தவரையே கைது செய்த அவலம்
x

மத்திய பிரதேசத்தில் ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், புகாரளித்த நபரையே போலீசார் கைது செய்த அவலம் நடந்து உள்ளது.


இந்தூர்,


மத்திய பிரதேசத்தில் சங்கர்பாக் காலனியில் வசித்து வருபவர் தர்மேந்திரா பெமால். இவர், ஜெகதீஷ் யோகி என்பவரிடம் வீடு ஒன்றை ரூ.11 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளார். மீத தொகையையும் பின்னர் கொடுத்து உள்ளார்.

ஆனால், வீட்டை இவரிடம் யோகி கொடுக்கவில்லை. இதனால், போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விவகாரம் இத்துடன் முடியவில்லை. ஜெயசிங் நாயக் என்பவருக்கும் யோகி வீட்டை விற்றுள்ளார் என்ற விவரம் பின்னரே தர்மேந்திராவுக்கு தெரிய வந்துள்ளது. அவரும், வீட்டை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என போலீசில் இதேபோன்ற புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

தொடர்ந்து, தர்மேந்திரா இந்த வழக்கில் தீவிரம் காட்ட, யோகிக்கு சதார் பஜார் காவல் நிலையத்தின் காவல் அதிகாரி ஒருவர் துணை போனது தெரிய வந்தது. அவருக்கு யோகி லஞ்சம் கொடுத்து உள்ளார். இதனால், இதனை கண்டும் காணாமல் அவர் இருந்து வந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் யோகி, வீட்டை சுனில் ராஜ்பகதூர் என்பவருக்கும் விற்றுள்ளது தெரிந்து தர்மேந்திரா அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தது பற்றி அறிந்த யோகி, பதிலுக்கு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

ஆச்சரியப்படும் வகையில், போலீசார் அதன்பேரில் நடவடிக்கை எடுத்து தர்மேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதன்பின், போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்த தர்மேந்திரா, நேராக யோகியை சென்று பார்த்து உள்ளார்.

ஆனால், அவரை யோகி மிரட்டியுள்ளார். உன்னுடைய புகாருக்கு எந்த பலனும் இருக்காது என்று மிரட்டியும் இருக்கிறார். ஒரே வீட்டை 3 பேருக்கு பல லட்சங்களுக்கு ஒருவர் விற்றதுடன், அதனால் பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்தும், அவரையே போலீசார் கைது செய்த அவலம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story