உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி
உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தார்வார் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
உப்பள்ளி-
உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தார்வார் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
உப்பள்ளி ஈத்கா மைதானம்
நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை நிறுவி நிகழ்ச்சி நடத்த இந்து அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் மாநகராட்சி கமிஷனரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் எந்த முடிவும் அறிவிக்காமல் இருந்து வந்தார். இதனை கண்டித்து இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தின்பேரில் மாநகராட்சி கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
ஐகோர்ட்டில் மனு
இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி பொதுக்குழுவின் அவசர கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலையை வைக்க அனுமதி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து உடனடியாக கர்நாடக ஐகோர்ட்டு தார்வார் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எதிர்க்கட்சிக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் பொதுக்குழுவை கூட்டி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் முஸ்லிம் அமைப்பு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அனுமதி
இந்த மனுக்கள் மீதான விசாரணை தார்வார் ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி சச்சின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்ப்பு மனுக்களை தள்ளுபடி செய்து ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டு உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ள இந்து அமைப்பினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.