2024ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் - மணீஷ் சிசோடியா விமர்சனம்


2024ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் - மணீஷ் சிசோடியா விமர்சனம்
x

கோப்புப்படம்

2024ல் மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் என்று டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபானக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து சிபிஐ டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் 14 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டது.

டெல்லியில் இருந்து தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் வரை இந்த விசாரணை நீண்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. அதன்படி அமலாக்கத்துறை தற்போது, சிபிஐயிடம் விசாரணை குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளது. பண பரிமாற்றம் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற 13 பேருக்கும் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தன் மீதான சிபிஐயின் லுக் அவுட் நோட்டீசுக்கு, பிரதமர் மோடியை டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றுக்கு தீர்வு காணும் தலைவரை நாடு இன்று தேடிக்கொண்டிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலையும், மணீஷ் சிசோடியாவையும் பூஜ்ஜியமாக்குவதன் மூலம் என்ன சாதிக்க முடியும்? சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து சிந்திக்கும் பிரதமர்தான் நாட்டுக்கு தேவை. 2024 ஆம் ஆண்டில் அவர்களின் பெரும் வாக்குறுதிகளை கேட்ட பிறகு, பொதுமக்கள் அவர்களுக்கு (பாஜக) 'லுக் அவுட் நோட்டீஸ்' கொடுப்பார்கள்" என்று மணீஷ் சிசோடியா கூறினார்.

இதனையடுத்து மணீஷ் சிசோடியா தனது டுவிட்டரில், "உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்தன, எதுவும் கிடைக்கவில்லை... இப்போது மணீஷ் சிசோடியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருக்கிறீர்கள். இது என்ன வித்தை மோடி ஜி... நான் டெல்லியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? தயவு செய்து எங்கே வரவேண்டும் என்று சொல்லுங்கள். இது என்ன வித்தையாக இருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story