"ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" - பிரதமர் மோடி பெருமிதம்
ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஹாங்சோவ்,
45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15-வது நாளாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை இந்தியா வென்றுள்ள நிலையில், வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
ஆசிய விளையாட்டு போட்டியில் இது இந்தியாவுக்கு ஒரு முக்கிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும், வரும் 10ஆம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.