விளம்பர அரசியலா, வளர்ச்சிக்கான அரசியலா என டெல்லி மக்கள் முடிவு செய்வார்கள்: அமித்ஷா


விளம்பர அரசியலா, வளர்ச்சிக்கான அரசியலா என டெல்லி மக்கள் முடிவு செய்வார்கள்:  அமித்ஷா
x

விளம்பர அரசியலா அல்லது வளர்ச்சிக்கான அரசியலா என்பது பற்றி டெல்லி மக்களே முடிவு செய்ய வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் மாநகராட்சிக்கு உட்பட்ட தேக்கண்ட் பகுதியில் கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான ஆலை தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டார்.

அவர் ஆலையை திறந்து வைத்து பேசும்போது, இந்த ஆலையானது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மெகா டன் கழிவுபொருட்களை கையாளும் திறன் வாய்ந்தது. இதுதவிர, ஆலையில் இருந்து 25 மெகா வாட்ஸ் பசுமையாற்றலும் உற்பத்தி செய்யப்படும்.

இது ஒரு பன்முக பரிமாணம் மற்றும் பன்னோக்கு ஆலையாக செயல்படும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசும்போது, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தினசரி பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை தந்து கொண்டிருக்கிறார்.

பெரிய பெரிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். பத்திரிகை பேட்டிகள் வளர்ச்சியை கொண்டு வரும் என அவர் நினைக்கிறார். விளம்பரங்களை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்தி விடலாம் என்றும் நினைத்து கொண்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியை ஏ.ஏ.பி.நிர்பார் (ஆம் ஆத்மி நிர்பார்) ஆக்க விரும்புகிறது. அதேவேளையில் நாங்கள் டெல்லியை ஆத்மநிர்பார் ஆக்க விரும்புகிறோம்.

விளம்பரத்திற்கான (விக்யாபன்) அரசியலா அல்லது வளர்ச்சிக்கான (விகாஸ்) அரசியலா என டெல்லி மக்கள் முடிவு செய்ய வேண்டும். அவற்றுடன், பிரசாரத்திற்கான (பிரசார்) அரசியலா அல்லது மாற்றத்திற்கான (பரிவர்த்தன்) அரசியலா என்றும் டெல்லி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.


Next Story