காங்கிரஸ் ஊதிய 'பொய்' பலூனை மக்கள் உடைத்துவிட்டனர்
பா.ஜனதாவினர் மீது குற்றம்சாட்டி காங்கிரஸ் ஊதிய பொய் பலூனை மக்கள் உடைத்துவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
பெங்களூரு:-
பிரதமர் மோடி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று 2-வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தினார். பின்னர் அவர் சிவமொக்கா(மாவட்டம்) டவுன் ஆயனூரில் நடந்த பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி பிரசாரத்தின்போது பா.ஜனதா மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் எதுவும் எடுபடவில்லை என்பதால் தற்போது அக்கட்சியின் மூத்த தலைவரை(சோனியா காந்தி) களத்தில் இறக்கி உள்ளனர். தாங்கள் கூறிய பொய்கள் எதுவும் எடுபடாததால் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயமும், அச்சமும் காங்கிரசாரை தொற்றிக் கொண்டது.
காங்கிரஸ் கட்சி மூழ்க தொடங்கிவிட்டது
காங்கிரஸ் கட்சி மூழ்க தொடங்கி விட்டது. தேர்தல் தோல்விக்கு அக்கட்சியினர் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க தொடங்கி விட்டனர். பா.ஜனதாவினர் மீது குற்றம்சாட்டி காங்கிரஸ் ஊதிய பொய் பலூனை மக்கள் உடைத்துவிட்டனர். அந்த பலூன் வெடித்து சிதறி
விட்டது. பெங்களூருவில் மக்கள் தந்த ஆதரவு என் மனதை தொட்டுவிட்டது. மக்களின் ஆதரவு மூலம் எனக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. நான் இன்று(நேற்று) நடத்திய ஊர்வலம் இது நான் ஏற்கனவே மேற்கொண்ட பிரமாண்ட ஊர்வலம் போன்று இல்லை. இது சிறிய ஊர்வலம் தான். 'நீட்' தேர்வு காரணமாக மாணவ-மாணைகள் பாதிக்கப்பட கூடாது என்று எங்கள் கட்சியினரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.
அது என்னவென்றால் நமக்கான தேர்வு(தேர்தல்) வருகிற 10-ந் தேதி தான். ஆனால் மாணவ-மாணவிகளுக்கான நீட் தேர்வு இன்று(நேற்று) நடக்கிறது. நாம் மாணவ-மாணவிகளின் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் நாம் காலையில் ஊர்வலத்தை தொடங்கி வேகமாக முடித்துவிட வேண்டும் என்று தெரிவித்தேன்.
வட்டியுடன் திருப்பி கொடுப்பேன்
பெங்களூருவில் நான் கண்ட மக்கள் கூட்டம் அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு, நம்பிக்கையை வெளிப்படுத்தியது. அவர்கள் காட்டிய அன்பு என் இதயத்தை மிகவும் தொட்டுவிட்டது. அதற்காக நான் கர்நாடக மக்களுக்கு கடன்பட்டுள்ளேன். அவர்கள் என் மீது காட்டிய அன்பு, நம்பிக்கையை அவர்களுக்கு திருப்பிக்காட்ட நான் விரும்புகிறேன். அதற்காக நான் கர்நாடகாவை வளர்ச்சி அடைய செய்வேன். அதன்மூலம் மக்கள் என் மீது காட்டிய அன்பை வட்டியுடன் திருப்பி கொடுப்பேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு அனுமன் சிலையும் வழங்கப்பட்டு காவி நிற சிவாஜி தலைப்பாகையும் அணிவிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில்
குவிந்திருந்த மக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டனர். அதுபோல் பிரதமர் மோடி தான் பேசியபோது 'ஜெய் பஜ்ரங்பலி' என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.