40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா; முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டம்


40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா; முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டம்
x

40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை நடந்து வருவதால், அதுபற்றிய விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு பாக்கி தொகை பட்டுவாடா செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடக்கிறது. இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சி நடந்தது. இந்த ஆட்சியில் அரசு வளர்ச்சிப் பணிகளுக்கு மந்திரிகள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக காண்டிராக்டர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. தேர்தலின்போதே காங்கிரஸ் கட்சி, கடந்த பா.ஜனதா ஆட்சியில் நடந்த 40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை நடத்துவோம் என்று அறிவித்தது.

அதன்படி தற்போது கர்நாடக இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வீரப்பா தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் கடந்த பா.ஜனதா ஆட்சியில் செய்த வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட்ட நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்று காண்டிராக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதாவும் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், 40 சதவீத

கமிஷன் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடந்து வருவதால், அந்த விசாரணை முடிந்த பிறகே காண்டிராக்டர்களுக்கு நிலுவை தொகை விடுவிக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதுதொடர்பாக சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பா.ஜனதா அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம். அதன்படி நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வீரப்பா தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சியில் பணிகளை செய்யாமலேயே பணம் பட்டுவாடா செய்துள்ளனர். சில பகுதிகளில் பாதி வேலைகளை செய்தவர்களுக்கும் பணம் வழங்கியுள்ளனர். நீதி விசாரணை குழு, இந்த எல்லா அம்சங்கள் குறித்தும் விசாரணை நடத்தும்.

இந்த விசாரணை நடைபெறுவதால் தற்போது காண்டிராக்டர்களுக்கு பாக்கி பட்டுவாடா செய்வது சரியாக இருக்காது. நியாயமான முறையில் பணிகளை மேற்கொண்ட காண்டிராக்டர்கள் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டோம். இதுபற்றி காண்டிராக்டர்களுக்கு பயம் வேண்டாம்.

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக், எங்கள் அரசு மீது 15 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஆனால் கமிஷன் அளவை 40 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்.அசோக்கின் கருத்து, முந்தைய பா.ஜனதா அரசை விட காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

எங்கள் அரசு மீதான குற்றச்சாட்டை சவாலாக ஏற்று அக்னி பரீட்சையில் வெற்றி பெற்று நாங்கள் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவோம். முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில அரசு காண்டிராக்டர்களுக்கு பாக்கித்தொகையை பட்டுவாடா செய்யவில்லை என்றும், அதனால் ராகுல் காந்தி தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. இதை பாார்க்கும்போது, அவருக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை என்பதுபோல் தெரிகிறது.

பாக்கித்தொகையை வழங்குமாறு காண்டிராக்டர்கள் என்னையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். பெங்களூரு மாநகராட்சி தவிர பிற ஒப்பந்ததாரர்களுக்கும் பாக்கியை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். இதற்கிடையே வெகு சில காண்டிராக்டர்கள் தங்களின் சுயநலத்திற்காகவும், உள்நோக்கத்திலும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கமிஷன் குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story