இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து: அடுத்த மாதம் தொடங்குகிறது
இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது
கொழும்பு,
இந்தியா-இலங்கை இடையில் பயணிகள் கப்பல் இயக்கம் குறித்து நீண்டகாலமாக கூறப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பான புதிய அறிவிப்பை இலங்கை விமான போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா நேற்று வெளியிட்டார்.
அதாவது, 'வருகிற ஏப்ரல் 29-ந் தேதி முதல், இந்தியாவின் காரைக்கால்-இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும். இந்த கப்பலில் செல்லும் ஒவ்வொரு பயணியும், சலுகைக் கட்டணத்தில் தலா 100 கிலோ பொருட்கள் வரை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவார்கள். இரு நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு பயணிகள் கப்பல் நிறுவனமும் இந்த சேவையை இயக்க முன்வரலாம்' என்று கூறினார்.
இந்த போக்குவரத்துக்கு வசதியாக, காங்கேசன்துறையில் ஒரு பயணிகள் கப்பல் தளத்தை இலங்கை கடற்படை கட்டி வருகிறது. இந்தியா-இலங்கை இடையிலான கப்பல் பயணம், 4 மணி நேரம் கொண்டதாக இருக்கும் என இலங்கை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.