தெலுங்கானா முதல்-மந்திரியின் கட்சி பெயர் பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றம்


தெலுங்கானா முதல்-மந்திரியின் கட்சி பெயர் பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றம்
x

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் கட்சி பெயர் பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.



ஐதராபாத்,


தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அவரது கட்சி தேசிய அரசியலில் நுழையும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 5-ந்தேதி அக்கட்சியின் பெயர் பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றம் செய்யப்பட்டது. கட்சியின் பெயர் மாற்றம் பற்றி தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவித்தது.

அதனை தேர்தல் ஆணையம் இன்று ஏற்று கொண்டுள்ளது. தொடர்ந்து அதற்கான கடிதம் ஒன்றையும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு அளித்து உள்ளது. அதில், அக்கட்சியின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கான தேவையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.

அக்கட்சியின் பொது குழு கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பின்பு, கடந்த நவம்பர் 7-ந்தேதி பொது நோட்டீஸ் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஏதேனும் எதிர்ப்புகள் இருக்குமென்றால் அதனை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கும்படியும் பொது மக்களிடம் கட்சி கேட்டு கொண்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அளித்த ஒப்புதலை தொடர்ந்து, தனது கட்சி உறுப்பினர்களை ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் சந்திரசேகர ராவ் நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், கட்சியின் பெயர் மாற்றத்திற்கான கடிதத்தில் அவர் கையெழுத்திடுகிறார்.


Next Story