குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது
இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது.
புதுடெல்லி,
இந்திய குற்றவியல் நடைமுறை, ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த 3 சட்டங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்கள் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது.
இச்சட்டங்களை முற்றிலும் மறுசீரமைத்து, தற்போதைய தேவையையும், மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, 3 புதிய குற்றவியல் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பாரதீய நீதி சட்ட மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதீய சாட்சியங்கள் சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்தார்.
நிலைக்குழுவுக்கு அனுப்பினார்
அத்துடன், 3 மசோதாக்களையும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அவற்றை அனுப்பி வைத்தார்.
உள்துறை விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, பா.ஜனதா எம்.பி. பிரிஜ் லால் தலைமையில் செயல்படுகிறது.
ஆய்வு
3 குற்றவியல் மசோதாக்களையும் ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், 3 மசோதாக்களையும் உறுப்பினர்களான எம்.பி.க்கள் ஆய்வு செய்தனர்.
உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அந்த மசோதாக்கள் குறித்து உறுப்பினர்கள் முன்னிலையில் விளக்கி கூறினார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழு 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. அதன் சிபாரிசுகள் அடிப்படையில், திருத்தி அமைக்கப்பட்ட மசோதாக்கள், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.