நாடாளுமன்றம் 8-வது நாளாக முடக்கம்: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
மணிப்பூர் பிரச்சினையால் ஏற்பட்ட அமளி காரணமாக, நாடாளுமன்றம் 8-வது நாளாக முடங்கியது. அதே சமயத்தில், ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதனால், முதல் நாளில் இருந்தே நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.
இந்நிலையில், 8-வது நாள் கூட்டம் நேற்று நடந்தது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியவுடன், மலாவியில் இருந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்கு வந்து, நாடாளுமன்ற அலுவல்களை பார்த்து வருவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஒத்திவைப்பு
அவர் பேசி முடித்தவுடன், மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி, சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்ப தொடங்கினர்.
கையில் பதாகைகளை பிடித்தபடி, சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் அதை கண்டுகொள்ளாமல், கேள்வி நேரத்தை தொடங்கினார். 2 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அமளி நீடித்தபடியே இருந்ததால், சபாநாயகர் சபையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்தார்.
3 ஆண்டு சிறை
பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா, மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. சினிமாக்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிடுவதை தடுக்க இம்மசோதா வழி வகுக்கிறது.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பேசியதாவது:-
சினிமா திருட்டு காரணமாக, திரைப்பட தொழில் ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே, திரைப்பட தொழிலை பாதுகாக்கஇந்த கடுமையான சட்டம் கொண்டுவரப்படுகிறது.
சினிமாவை சட்டவிரோதமாக படம்பிடித்து வெளியிடுபவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், அந்த சினிமா தயாரிப்பு செலவில் 5 சதவீதம்வரை அபராதமும் விதிக்கப்படும்.
தணிக்கை சான்றிதழ்
மேலும், 'யுஏ' சினிமா சான்றிதழின்கீழ், வயது அடிப்படையில் 'யுஏ 7பிளஸ்', 'யுஏ 13பிளஸ்', 'யுஏ 16பிளஸ்' ஆகிய புதிய பிரிவுகளில் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் அளிக்கப்படும். டி.வி. மற்றும் இதர ஊடகங்களில் வெளியிட தனி சான்றிதழ் அளிக்கப்படும் என்று அவர் பேசினார்.
பின்னர், மணிப்பூர் பிரச்சினை தொடர்பான அமளியால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை
மாநிலங்களவை நேற்று காலை கூடியவுடன், சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர், மணிப்பூர் பிரச்சினை குறித்து குறுகிய கால விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் சம்மதிக்கிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, ''267-ம் விதியின்கீழ்தான் விவாதம் நடத்த வேண்டும். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று வந்துள்ளனர். மணிப்பூர் பற்றி எரிகிறது. ஆகவே, 267-வது விதியின்கீழ் விவாதம் நடத்துங்கள்'' என்று கூறினார். அந்த கோரிக்கையை வலியுறுத்தி, சில உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
2 மணிக்கு விவாதத்துக்கு தயார்
அவை முன்னவரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல் எழுந்து, ''மணிப்பூர் நிலவரம் பற்றி விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. பிற்பகல் 2 மணிக்கே சபைத்தலைவர் விவாதத்தை தொடங்கலாம்'' என்று கூறினார்.
அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
அவருக்கு எதிராக கோஷங்கள் எழுந்தநிலையில், சபை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஜெகதீப் தன்கர் பேச அழைத்தார். அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அசாதாரண நிகழ்வாக பேச அழைத்ததாக ஜெகதீப் தன்கர் கூறினார். பின்னர், அமளி காரணமாக, பிற்பகல் 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
எந்த விதி?
பிற்பகல் 2 மணிக்கு, ஜெகதீப் தன்கர், விவாதத்தை தொடங்க தயாரானார். பா.ஜனதா உறுப்பினரை பேச அழைத்தார். ஆனால், சபை அலுவல்களை ஒத்திவைக்க வழிவகுக்கும் 267-வது விதியின்கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
அதற்கு ஜெகதீப் தன்கர், ''267-வது விதியின்கீழ் கொடுத்திருந்த நோட்டீஸ்களை நிராகரித்து விட்டேன். 176-வது விதியின்கீழ் குறுகிய கால விவாதம் நடத்த அனுமதி அளித்துள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.
அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை பிற்பகல் 2.30 மணிவரையும், பிறகு 3.30 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.
முடக்கம்
பின்னர், 3.30 மணிக்கு சபை கூடியபோது மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதத்தை தொடங்கலாம் என்று சபைத்தலைவர் கூறினார். ஆனால், 267-வது விதியின்கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்தன. இதையடுத்து, சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், 8-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.