மணிப்பூர் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ் மீண்டும் நோட்டீஸ்!


மணிப்பூர் பிரச்சினை:  நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ் மீண்டும் நோட்டீஸ்!
x

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தக் கோரி திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளன.

புதுடெல்லி,

மணிப்பூரில் 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு வரும் கலவரம் மற்றும் அதில் 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன.

இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் போர்க்கோலம் பூண்டு வருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 2 நாள் அலுவல்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இன்று நாடாளுமன்றத்தில் கூட்டாக போராடுவதற்கும் திட்டமிட்டு உள்ளன.

ஆனால் மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வாருங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்தநிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளன. மாநிலங்களவையில் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதேபோல மக்களவையில் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.


Next Story