3 மசோதாக்களை நிறைவேற்றி மக்களவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


3 மசோதாக்களை நிறைவேற்றி மக்களவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x

அமளிக்கிடையே 3 மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

அமளி

நாடாளுமன்ற மக்களவை காலை கூடியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மணிப்பூர் பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். சிலர் சபையின் மையப்பகுதியில் நின்றனர். சிலர் சபாநாயகர் இருக்கை அருகே நின்றனர். கையில் பதாகைகளை பிடித்தபடி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரச்சினை எழுப்ப அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் ஓம்பிர்லா உறுதி அளித்தார். பின்னர், கேள்வி நேரம் தொடங்கியது. 3 கேள்விகளும், அவை தொடர்பான துணைக்கேள்விகளும் எழுப்பப்பட்டன. அமளி அதிகரித்ததால், சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

3 மசோதாக்கள்

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, அமளிக்கிடையே அடுத்தடுத்து 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா, கடலோர பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, எஸ்.சி. தொடர்பான அரசியல் சட்ட ஆணை திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் குறுகிய நேர விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.

இதில், பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா, பிறப்பு சான்றிதழை கல்வி நிறுவன சேர்க்கை, ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டியல், ஆதார் எண் பெறுதல், திருமண பதிவு, அரசு பணி நியமனம் என அனைத்துக்கும் ஒரே ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கிறது. மேலும், தேசிய, மாநில அளவிலான பிறப்பு-இறப்பு தகவல் தொகுப்பை உருவாக்க வழிவகுக்கிறது.

டெல்லி அவசர சட்டத்துக்கு மாற்றாக, தேசிய தலைநகர் டெல்லி பிராந்திய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கேலிக்கூத்து

மாநிலங்களவை கூடியவுடன், மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு, பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அப்போதைய சபாநாயகர், அது அரசியல்சட்ட ரீதியாக தவறான முன்மாதிரி என்று அதை நிராகரித்து விட்டார். 267-வது விதியின்கீழ், விவாதம் நடத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையால் சபை திரும்ப திரும்ப முடங்கி வருகிறது. மக்களின் பார்வையில் நாம் கேலிக்கூத்தாக காட்சி அளிக்கிறோம்.

ஒத்திவைப்பு

உறுப்பினர்கள் பேச கூடுதல் நேரம் ஒதுக்குவதாக கட்சி தலைவர்களிடம் கடந்த திங்கட்கிழமை உறுதி அளித்தேன். அப்படி இருந்தும் விவாதம் நடத்த முடியவில்லை. குழந்தையை குளிப்பாட்டிய தண்ணீருடன், குழந்தையையும் தூக்கி எறிந்த சூழ்நிலையை நாம் உருவாக்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார். சபையை பகல் 12 மணி வரை அவர் ஒத்திவைத்தார்.

வெளிநடப்பு

பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, மீண்டும் மணிப்பூர் பிரச்சினையால் அமளி உருவானது. அதற்கிடையே, கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதி கேட்டபோது, அனுமதி அளிக்கப்படவில்லை. அதை கண்டித்து, 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

2 மசோதாக்கள் நிறைவேறின

பின்னர், மாநிலங்களவை கூடியபோது, மத்திய கூட்டுறவுத்துறை இணை மந்திரி பி.எல்.வர்மா, பன்மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தவும், அவற்றுக்கு வழக்கமாக தேர்தல் நடத்தவும் இந்த மசோதா வகை செய்கிறது.

தேர்தல் நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது, மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில், மத்தியஸ்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவில், வணிகம் தொடர்பான சர்ச்சைகளில் மத்தியஸ்த தீர்வுக்கு உடன்படுவது கட்டாயம் அல்ல என்று மாற்றப்பட்டுள்ளது. மத்தியஸ்த நடைமுறைகளை முடிப்பதற்கான கால அவகாசத்தை 180 நாட்களாக குறைக்கவும் இம்மசோதா வகை செய்கிறது.


Next Story