போலி செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக சமூக வலைத்தள நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி


போலி செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக சமூக வலைத்தள நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2023 2:48 AM IST (Updated: 22 Jun 2023 2:50 PM IST)
t-max-icont-min-icon

போலி செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக சமூக வலைத்தள நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறி உள்ளார்.

பெங்களூரு:

போலி செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக சமூக வலைத்தள நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறி உள்ளார்.

அவதூறு கருத்துக்கள்

கர்நாடக போலீஸ் துறை மந்திரி பரமேஸ்வர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பரவல் அதிகரித்து வருகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில் சமூக வலைத்தளங்களை பெரும்பாலானோர் பயன்படுத்துவதால், அவற்றில் பதிவிடப்படும் போலி செய்திகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமூக வலைத்தளங்கள் மூலம் வரும் அச்சுறுத்தல் போன்றவை குறித்து போலீசார் விசாரணை நடத்தும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாக ஒத்துழைப்பு வழங்குவது கிடையாது. இதனால் குற்ற வழக்குகளில் தீர்வு கிடைப்பது தாமதமாகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்தும், போலி எண்களை கொண்டு சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பதிவிடப்படுகிறது.

அதை பதிவிட்டவர்கள் குறித்து நமக்கு தெரிவதில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட வலைத்தள பக்க நிறுவனத்திற்கு தெரியும். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசியபோது, சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். எனவே இதுதொடர்பாக பேஸ்-புக்(முகநூல்), வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களின் இந்திய கிளை அல்லது மண்டல அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடந்த உள்ளோம்.

தனிக்குழு

கலவரங்களை உருவாக்கும் விதமாக கருத்து பதிவிடுவோர் குறித்து அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளது. அதுதொடர்பான தகவல்களை போலீசாருக்கு உடனடியாக வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க அவர்களிடம் அறிவுறுத்தப்படும். இந்த விவகாரத்தை கர்நாடக அரசு தீவிரமாக எடுத்துள்ளது. எனவே மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் சைபர் நிபுணர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் என்ஜினீயரிங், டிப்ளமோ படிப்புகள் முடித்தவர்கள் பலர் உள்ளனர்.

அவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம் சைபர் குற்றங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய தனிக்குழு விசாரித்து உடனடியாக தீர்வு காணும். நாட்டிலேயே அதிக சைபர் குற்றங்கள் நடக்கும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது. அதே சமயம் நமது மாநிலத்தில் திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரிகளும் அதிகம் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story