ஜம்மு-காஷ்மீரில் இந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக காஷ்மீரை விட்டு வெளியேற முடிவு.?


ஜம்மு-காஷ்மீரில் இந்து பண்டிட்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக காஷ்மீரை விட்டு வெளியேற முடிவு.?
x

காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சமீப நாட்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டு கொன்று வருகின்றனர். கடந்த 25ந்தேதி, ஒரு டி.வி. நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டு கொல்லப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஜம்முவின் சம்பா மாவட்ட பகுதியை சேர்ந்த மகள், கணவருடன் வசித்து வந்த ஆசிரியை ரஜ்னி பாலா (வயது 36) என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் கடந்த மே மாதத்தில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர். இந்நிலையில், இந்துக்களை குறிவைத்து படுகொலை செய்யும் சம்பவத்தின் ஒரு பகுதியாக வங்கி மேலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் இன்று சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

அவரது படுகொலைக்கு, காஷ்மீர் சுதந்திர போராளிகள் குழு பொறுப்பேற்று எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் உள்ளது. இதுபற்றி பயங்கரவாத குழு வெளியிட்டுள்ள அந்தகடிதத்தில், காஷ்மீரின் வரைபட மாற்றத்தில் ஈடுபடும் எவருக்கும் இதுபோன்ற நிலைமையே ஏற்படும். இங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் அல்லாத அனைவருக்கும் இது ஒரு பாடம் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

1990 முதல் இன்று வரை

முன்னதாக, 1990களில் காஷ்மீர் பண்டிட்டுகள் பெருமளவில் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இருப்பினும், 2008இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கு உதவ ஒரு திட்டத்தை உருவாக்கினார் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு 6,000 வேலைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, சுமார் 3,800 புலம்பெயர்ந்தோர் காஷ்மீரில் பல்வேறு துறைகளில் வேலை செய்து வந்தனர். டிசம்பர் 2020 வரை நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில்,டிசம்பர் 2020ல், தங்க நகை வியாபாரி ஒருவர் காஷ்மீர் குடியுரிமைச் சான்றிதழைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, தீவிரவாதிகளின் நடத்தி வரும் தாக்குதல்களில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு 2019, ஆகஸ்ட்டில் ரத்து செய்த பின்னர், இந்த தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. சிறுபான்மையினர் மத்தியில் அதிகரித்து வரும் அச்சம் அப்பட்டமாக தெரிகிறது.

இது குறித்து காஷ்மீர் பண்டிட் ஊழியர் ஒருவர் கூறுகையில், "இங்கு நிலைமை சீரடைந்துள்ளது என்ற வாக்குறுதியின் பேரில் காஷ்மீர் திரும்பினோம். இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காஷ்மீரி பண்டிட்டுகள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.

இதனையடுத்து காஷ்மீர் பண்டிட் ஊழியர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் , பணியிடங்களை மாற்றுவதற்கும் முயற்சிகளை ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் ராகுல் பட் என்பவர், மே 12 அன்று அவரது அலுவலகத்திற்குள் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதில் இருந்து, காஷ்மீர் பண்டிட்கள் தினசரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


ஒட்டுமொத்தமாக காஷ்மீரை விட்டு வெளியேற முடிவு


காஷ்மீர் சுதந்திர போராளிகள் குழு, இந்துக்களை குறிவைத்து கொல்லத் தொடங்கியதை அடுத்து இந்து அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளத்தாக்கை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அங்கு வசித்துவரும் 4,000க்கும் மேற்பட்ட பண்டிட் ஊழியர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, சிறுபான்மை அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்தமாக காஷ்மீரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். பாதுகாப்புப் பணியாளர்களால் பாதுகாக்கப்பட்ட பல்வேறு இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் ஊழியர்கள் uட்பட அனைவரும், போராட்டத்தை கைவிட்டு ஜம்முவை விட்டு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரி இந்துக்களின் அமைப்பு, பள்ளத்தாக்கில் உள்ள சிறுபான்மையினரை வெள்ளிக்கிழமை காலைக்குள் இடம்பெயரச் சொல்லி அறிக்கைகளை வெளியிட்டது. இதனை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர் என்ற தகவலை ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "பரபரப்பாக பேசப்பட்டு வரும் வதந்திகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். நாங்கள் தினமும் 16,000 முதல் 18,000 பயணிகளை கையாளுகிறோம். இன்றும் பயணிகளின் எண்ணிக்கை சராசரியாக உள்ளது. சிறுபான்மை சமூகத்தினர் அதிகளவில் இங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் குவியவில்லை" என்றனர்.


Next Story