2ஏ இடஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க கோரி பஞ்சமசாலி சமுகத்தினர் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம்
2ஏ இடஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்க கோரி பஞ்சமசாலி சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு பெலகாவியில் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெலகாவி:
நடைபயணம்
கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் வீரசைவ-லிங்காயத் சமூகம் பலமானது. அந்த சமூகத்தில் 50-க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் விவசாயத்தை பாரம்பரியமாக கொண்ட பஞ்சமசாலி சமூகமும் ஒன்று. அந்த சமூகம் தற்போது கர்நாடக அரசின் இட ஒதுக்கீட்டு பட்டியலில் 3பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் உள்ள சமூகங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பஞ்சமசாலி சமூகத்தினர், தங்களை 2ஏ இட ஒதுக்கீட்டு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். 2ஏ பட்டியலுக்கு மாற்றினால் 15 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். அந்த சமூகத்தின் மடாதிபதி ஜெயமிருதஞ்சய சுவாமி தலைமையில் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த மடாதிபதி வட கர்நாடகத்தில் இருந்து பெங்களூரு வரை நடைபயணம் மேற்கொண்டார்.
குளிர்கால கூட்டத்தொடர்
இந்த நிலையில் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் பஞ்சமசாலி சமூகத்தின் மடாதிபதி ஜெயமிருதஞ்சய சுவாமி தலைமையில் நேற்று சுவர்ண சவுதாவை நோக்கி நடைபயணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சுவர்ண சவுதாவை நோக்கி வந்ததால் பெலகாவியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். இதற்கிடையே சுவர்ண சவுதாவுக்கு வந்த பஞ்சமசாலி சமூகத்தினர் அங்கு தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு 2ஏ இட ஒதுக்கீட்டு அந்தஸ்து வழங்கும் வரை இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று மடாதிபதி அறிவித்துள்ளார்.
பா.ஜனதாவை ஆதரிக்க மாட்டோம்
இந்த போராட்டத்திற்கு பா.ஜனதாவில் உள்ள அந்த சமூகத்தை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உள்பட பலர் நேரில் ஆதரவு வழங்கினர். இதுகுறித்து பசனகவுடா பட்டீல் யத்னால் கூறுகையில், 'பஞ்சமசாலி சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டு பட்டியலில் 2ஏ அந்தஸ்து வழங்க கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் கர்நாடக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இதுபற்றி விவாதிப்பதாக அரசு சொல்கிறது. இது எங்கள் சமூகத்தினரை திசை திருப்பும் செயல் ஆகும். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க மாட்டோம்' என்றார்.
சொந்த கட்சிக்கு எதிராக பசனகவுடா பட்டீல் யத்னால் கூறியுள்ள இந்த கருத்து கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சமசாலி சமூகத்தினரின் போராட்டத்தால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த ஓரிரு நாட்களில் இதுகுறித்து மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சமசாலி சமூகத்தை 2ஏ இட ஒதுக்கீட்டு பட்டியலில் சேர்த்தால், அதில் உள்ள பிற சிறிய சமூகங்கள் பாதிக்கும் என்று அந்த சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிறிய சமூகங்கள்
ஒருவேளை பஞ்சமசாலி சமூகத்தை 2ஏ இட ஒதுக்கீட்டு பட்டியலில் சேர்த்தால் அதில் உள்ள சிறிய சமூகங்கள் போராட தொடங்கும். இதன் காரணமாக மாநில பா.ஜனதா அரசு இட ஒதுக்கீட்டு சுழலில் சிக்கியுள்ளது என்றே கூறலாம். இதை பா.ஜனதா அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.