பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் இளம்பெண், கணவருடன் கைது


பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் இளம்பெண், கணவருடன் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் இளம்பெண், கணவருடன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூருவில்...

பெங்களூரு ஜுன்னசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் முலாயம் சிங் (வயது 25). இவரது மனைவி இக்ரா ஜீவனி (19). இந்த தம்பதி ஜுன்னசந்திரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த முலாயம் சிங் பெங்களூருவில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்து இருந்தார்.

இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த மர்மநபர், இந்தியாவுக்கு ஊடுருவியதாக தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் விசாரணை மற்றும் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இக்ரா ஜீவனி மீது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.

நேபாளம் வழியாக

மேலும், நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது பாகிஸ்தானை சேர்ந்தவர் இக்ரா ஜீவனி. இவருக்கும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முலாயம் சிங்கிற்கும் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. முலாயம் சிங்கிற்கு, அந்த பெண் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியாது என கூறப்படுகிறது.

இதையடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அந்த பெண் இந்திய-நேபாள எல்லைகள் வழியாக ரகசியமாக காத்மாண்டுவுக்கு வந்துள்ளார். பின்னர், இருவரும் இந்து முறைப்படி காத்மாண்டில் திருமணம் செய்து உள்ளனர். அதையடுத்து வேலைக்காக பெங்களூருவுக்கு இருவரும் வந்துள்ளனர். ஜுன்னசந்திராவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

பெயரை மாற்றி

இக்ரா ஜீவனி, பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு அவ்வப்போது பேசி வந்துள்ளார். இதுபற்றி மத்திய புலனாய்வு அமைப்பினருக்கு தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கர்நாடக புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக பாகிஸ்தான் பெண்ணையும், அவரது கணவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் வசிப்பதற்காக தனது மனைவிக்கு போலியாக ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களை முலாயம் சிங் சட்டவிரோதமாக பெற்றுள்ளார். இதற்காக இக்ரா ஜீவனியின் பெயரை ராம யாதவ் என மாற்றியதும் விசாரணையில் தெரிந்தது. மேலும் சம்பவம் பற்றி பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story