உளவு பணிக்காக இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்
இந்தியாவில் ஆயுதங்கள், போதை பொருட்கள், உளவு பணிக்காக பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஊடுருவல் அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஆயுதங்கள், போதை பொருட்கள், உளவு பணிக்காக பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஊடுருவல் அதிகரித்து உள்ளது.
பஞ்சாப்பின் அமிர்தரசஸ் நகரருகே எல்லையையொட்டிய பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியது. இதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இதன்பின்பு வயல்வெளியில் இருந்து அந்த ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது. சமீப காலங்களாக இந்திய வான்வெளிக்குள் இதுபோன்ற அத்துமீறி ஊடுருவும் முயற்சிகள் அதிகரித்து காணப்படுகின்றன.
பஞ்சாப் மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியே இந்த ஊடுருவல்கள் நடந்து வருகின்றன. இதன்படி, கடந்த 21-ந்தேதி அமிர்தசரஸ் பிரிவில் டாவோகே எல்லை பகுதியில் ஊடுருவிய ஆளில்லா விமானம் ஒன்றை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இந்த ஆண்டின் டிசம்பரில் முதல் வாரத்தில் இதுவரை இதுபோன்ற 16 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன. நவம்பர் 26-ந்தேதி இதேபோன்று ஆளில்லா விமானம் ஒன்று வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட நாற்கரங்கள் கொண்ட அந்த ஆளில்லா விமானம் பின்பு வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது. இவை அனைத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியே நாட்டுக்குள் ஊடுருவியுள்ளன.
கடந்த நவம்பர் 28-ந்தேதி வீராங்கனைகள் சுட்டு வீழ்த்திய 6 கரங்களுடன் கூடிய ஆளில்லா விமானம் 18.05 கிலோ எடை கொண்டிருந்தது. அதில், 3.11 கிலோ போதை பொருட்கள் கடத்தலுக்காக இருந்ததும் தெரிய வந்தது.
இந்தியாவில் ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தலுக்காகவும் மற்றும் இந்திய வான்வெளியில்உளவு பணி மேற்கொள்வதற்காகவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களின் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் கண்காணிப்பு பணியை தொடர்ந்து வருகின்றனர்.