நுபுர் சர்மாவை கொல்ல எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் நபர் கைது!


நுபுர் சர்மாவை கொல்ல எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் நபர் கைது!
x

நுபுர் சர்மாவைக் கொல்ல எல்லை தாண்டிய பாகிஸ்தான் நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவைக் கொல்ல சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர் ஒருவர் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 16 ஆம் தேதி இரவு 11 மணியளவில், இந்துமல்கோட் எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் இருந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் ரோந்து பணியின் போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒரு நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பையில், 11 அங்குல நீளமுள்ள கத்தி, சமய நூல்கள், உடைகள், உணவுகள் மற்றும் மணல் போன்றவை காணப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், அவர் தன்னை ரிஸ்வான் அஷ்ரப் என்றும், பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாபில் அமைந்துள்ள மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காட்டினார்.

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கொல்ல எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்ததாக அந்த நபர் தெரிவித்தார். மேலும், தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு முதலில் அஜ்மீர் தர்காவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறினான்.

மேல் விசாரணைக்காக அந்த நபரை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், எட்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இப்போது அந்த நபரிடம் ரா மற்றும் ராணுவ உளவுத்துறையின் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.


Next Story