சிக்கிமில் அனைத்து வாகனங்களிலும் இனி ஆக்சிஜன் உபகரணம் கட்டாயம்..!
சிக்கிமில் அனைத்து வாகனங்களிலும் ஆக்சிஜன் உபகரணம் எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேங்டாக்,
சிக்கிம் மாநிலத்தில் லாச்சென், லாச்சுங், குருடோங்மார் ஏரி, யும்தாங் உள்ளிட்ட 10,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள பல பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் குறிப்பாக மூத்த குடிமக்கள், குழந்தைகள் சுவாசப் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக சோம்கோ ஏரி, நாது-லா மற்றும் பாபா மந்திர் உள்ளிட்ட இடங்களில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் அதிக உயரமான இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் மூச்சுத்திணறலை எதிர்கொள்வதால் சிக்கிம் மாநிலத்தில் பதிவுசெய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் ஆக்சிஜன் உபகரணம் எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிக்கிம் போக்குவரத்து செயலர் ராஜ் யாதவ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனிநபர் மற்றும் வணிக ரீதியிலான அனைத்து வாகனங்களிலும் கையடக்க ஆக்சிஜன் உபகரணங்கள் இருப்பது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உபகரணங்கள் மாநில சுகாதாரத் துறையால் சான்றளிக்கப்படும் என்றும் போலீசார் மற்றும் போக்குவரத்துத் துறையின் மோட்டார் வாகனப் பிரிவினர் சோதனை நடத்தி, வானங்களில் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.