விமான நிலையங்களில் கூட்ட நெரிசல்: கூடுதல் ஊழியர்களை அமர்த்துங்கள்.. விமான நிறுவனங்களுக்கு உத்தரவு
விமான நிலையங்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க போதுமான ஊழியர்களை அமர்த்த வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்து விட்ட நிலையில் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளுக்காக பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க நேருவதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு புகார்கள் சென்றன.
அவற்றைப் பரிசீலித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விமான நிலையங்களில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்ற வகையில் 'செக்-இன் கவுண்ட்டர்'களிலும், 'லக்கேஜ்'களை விட்டுச்செல்லும் கவுண்ட்டர்களிலும் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்களை அமர்த்த வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விமானங்களின் வருகை தொடர்பான நிகழ்நேர தரவுகளை தங்களது சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது வெளியிடவும் விமான நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.