சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு.. ஸ்ரீநகரில் பிரதமர் மோடியுடன் இணையும் 7,000 பேர்
காஷ்மீர் மக்களுக்கும் பிரதமருக்கும் இடைவெளி இருப்பதாக சிலர் நம்பினால், அது அவர்களின் பிரச்சினை என மாநில ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்தார்.
ஸ்ரீநகர்:
யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், 10-வது யோகா தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அவ்வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் 7,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்ய உள்ளனர். இதற்காக மாநில அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாநில ஆளுநர் மனோஜ் சின்கா கூறியதாவது:-
சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி இங்கு வருகை தருவது ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு கிடைத்த கவுரவம் ஆகும். யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் 7,000-க்கும் மேற்பட்டவர்களுடன் தால் ஏரிக்கரையில் பிரதமா யோகாசனம் செய்வார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அளவிலும் உலக அளவிலும் யோகாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. யோகா நிகழ்ச்சிகளில் இதுவரை 23.5 கோடி பேர் பங்கேற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த யோகா தின நிகழ்ச்சியில் 23 லட்சம் மக்கள் பங்கேற்றனர். தினமும் யோகா செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மன அழுத்தத்தைப் போக்க மக்கள் யோகாவை தேர்வு செய்கிறார்கள்.
காஷ்மீர் மக்கள் மீது பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்துகிறார். காஷ்மீர் மக்களுக்கும் பிரதமருக்கும் இடைவெளி இருப்பதாக சிலர் நம்பினால், அது அவர்களின் பிரச்சினை. பிரதமர் மோடி, பல்வேறு வழிகளில் இங்குள்ள மக்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
ஜி20 மாநாட்டிற்கு பிறகு ஜம்மு காஷ்மீருக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பல நாடுகள் காஷ்மீருக்கான பயணத் தடையை ரத்து செய்துள்ளன. சர்வதேச யோகா தினத்திற்கு பிறகு, பல நாடுகள் பயணத் தடையை நீக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.