நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு
பல்வேறு முறைகேடுகளால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட வெற்றி பெற்ற மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி,
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த மே 5-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 24 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. எனவே இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது நடவடிக்கை போன்ற அதிரடிகள் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே பெரும் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 25-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதுடன், நடந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டு இருக்கிறது.இந்த மனுக்கள் அனைத்தும் வருகிற 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.வழக்கு விசாரணையின் முடிவில், இந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால், அது தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நேர்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் கருதுகின்றனர்.
எனவே நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்யக்கூடாது என அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். அந்தவகையில் குஜராத்தை சேர்ந்த 56 மாணவ-மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் பலரும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் ஆவர்.அவர்கள் தங்கள் மனுவில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்டோரை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கல்வி அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டு உள்ளது.
நீட் தேர்வை மீண்டும் நடத்துவது, நேர்மையாக மற்றும் தீவிரமாக படித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நியாயமற்றதாகவும், கடுமையானதாகவும் இருக்கும் எனக்கூறியுள்ள மாணவர்கள், இது கல்வி உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14-வது சட்டப்பிரிவுக்கு (சமத்துவத்திற்கான உரிமை) எதிரானது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.எனவே மறுதேர்வு நடத்த வேண்டாம் என மத்திய அரசையும், தேசிய தேர்வு முகமையையும் அறிவுறுத்துமாறும் மாணவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.