'இ-காமர்ஸ்' தளத்தில் வேலை தருவதாக கூறி 30 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடி மோசடி
‘இ-காமர்ஸ்’ தளத்தில் வேலை தருவதாக கூறி 30 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடி மோசடி செய்த கும்பலில் 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் ஏமாற்றம்
ஒரு சமூக வலைதளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து டெல்லி ரோகிணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த விளம்பரதாரரை அணுகியுள்ளார். அது 'இ-காமர்ஸ்' (மின் வணிகம்) வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரம். வீட்டில் இருந்து வேலை செய்து ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம் என அந்த விளம்பரம் தூண்டில் போட்டது.
இதன்பேரில் அந்த பெண் அணுகியபோது எதிர்முனையில் இருந்தவர்கள் ஆசைவார்த்தைகளை அள்ளித் தெளித்து உள்ளனர். ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிப்பது அவருக்கான பணி என கூறப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக சில பொருட்களை வாங்கும்படி கூறியுள்ளனர். இதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் அதன்பிறகு அந்த பெண்ணுக்கு எந்த பணமும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
துபாய் நிறுவனத்துக்கு…
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் டெல்லி வடக்கு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையின் விசாரணையில் மோசடி கும்பல் பயன்படுத்திய டெலிகிராம் ஐ.டி. சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய வாட்ஸ்-அப் எண்களும் வெளிநாட்டில் உள்ளவை.
இதைத்தொடர்ந்து அவர்களது வங்கி விவரங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் தினமும் சராசரி ரூ.5.2 கோடி பரிவர்த்தனைகள் நடந்தது தெரியவந்தது. பண பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை துபாயை தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
ரூ.200 கோடி மோசடி
இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 3 குற்றவாளிகள் யார்? என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 'பேடிஎம்'மின் முன்னாள் துணை மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஜார்ஜியாவில் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அவரைப் பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த மோசடி பற்றிய மேல்விசாரணையில் இதுபோல 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், அரியானா மற்றும் மும்பை போன்ற இடங்களிலும் மோசடி கும்பலுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும், இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.