கியூட் தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் - தேசிய தேர்வு முகமை
கியூட் (CUET) தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதிலும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான விண்ணப்பபங்கள் நேற்றைய தேதி வரை பெறப்பட்டது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தாண்டு பொது நுழைவுத் தேர்வை எழுத இருக்கின்றனர்.
இந்நிலையில் கியூட் (CUET) தேர்வுக்கு மொத்தமாக 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தனது டுவிட்டரில், " கியூட் - யூஜி (CUET-UG) தேர்வுக்கு 11,51,319 பேர் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் 9,13,540 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அவர்களில் பலர் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஆண்டுகளில், பல பல்கலைக்கழகங்கள் CUETஐ ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருடத்தில் இரண்டு முறை CUET நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இது மாணவர்களுக்கு CUET- தேர்வுக்கு திட்டமிடவும், முயற்சி செய்யவும் மேலும் உதவும். அனைத்து CUET விண்ணப்பதாரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.