கர்நாடகாவில் ரூ.98 கோடி மதிப்புள்ள 1 கோடி லிட்டர் பீர் பறிமுதல்
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மது வழங்குவதை தடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கென சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாமராஜநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மாநிலம் முழுவதும் 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடகாவில் வருகிற 26 மற்றும் மே 7-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.