அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கடும் அவதி


அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கடும் அவதி
x

தேர்தல் பணியில் மருத்துவ துறையினர் ஈடுபட்டு வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே இயங்குகிறது. இதனால் புறநோயாளிகள் உள்ளிட்டவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பெங்களூரு:-

தேர்தல் பணியில் மருத்துவ துறையினர்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசு ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் உள்பட அனைத்து துறை ஊழியர்களும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே சுகாதாரத் துறையின் கீழ்பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை ஆணையர் ரன்தீப் கடந்த மாதம் மாநில தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், மருத்துவ பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

விலக்கு அளிக்கப்படவில்லை

இருப்பினும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சம்பவம் காரணமாக பெங்களூரு ஜெயநகரில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரி, இந்திராநகரில் உள்ள சர் சி.வி.ராமன் ஆஸ்பத்திரிகளில் தேர்தல் பணியில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதால் கடந்த சில நாட்களாக அவசர சிகிச்சை பிரிவை தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. மேலும் ஜெயநகர் பொது ஆஸ்பத்திரியில் ஒரு அறிவிப்பு நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது.

அதில் வருகிற 10-ந்தேதிவரை மருத்துவமனை ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். எனவே அவசர சேவைகள் தவிர மற்ற சேவைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே நோயாளிகள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் மொத்தமுள்ள 73 செவிலியர்களில் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

நோயாளிகள் அவதி

அதுபோல் சர் சி.வி.ராமன் ஆஸ்பத்திரியில் 72 செவிலியர்களில் 5 பேர் மட்டுமே மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வ ஊழியர்கள், பல்வேறு துறைகளின் ஊழியர்களும் தேர்தல் பயிற்சிக்காக சென்றுள்ளனர்.

இதனால் இரு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. பலரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை சென்றனர்.

இதுகுறித்து சர் சி.வி.ராமன் மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், 'மருத்துவ ஊழியர்களை தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்காததால் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சையை தவிர்த்து பிற சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன' என்றார்.


Next Story