சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் இருக்கைகள் காலியாக கிடந்தன
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக சட்டசபை கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால் சட்டசபையில் இருக்கைகள் காலியாக கிடந்தன.
பெங்களூரு:-
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தியபோது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக 10 பேர் இடைநீக்கம் செய்யப்ப்டுள்ளனர். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 14-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன. இதனால் அந்த பக்கம் வெறிச்சோடி காணப்பட்டது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மட்டும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் அமரும் பகுதியில் உட்கார்ந்து இருந்தனர். எதிர்க்கட்சிகளின் இந்த புறக்கணிப்புக்கு இடையே பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் சிவலிங்கேகவுடா பேசும்போது கூறியதாவது:-
எதையும் செய்யவில்லை
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி 3.86 சதவீதமாக குறைந்துள்ளது. இது முன்பு 7.6 சதவீதமாக இருந்தது. பா.ஜனதா தனது ஆட்சி காலத்தில் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. பா.ஜனதா ஆட்சியில் ரூ.2½ லட்சம் கோடி அளவுக்கு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கினர்.
போதிய நிதி இல்லாமல் எதன் அடிப்படையில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கினர்?. பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகத்தின் கடன் ரூ.5.16 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆண்டுக்கு வட்டி மட்டும் ரூ.38 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும். பல்வேறு திட்டங்கள் மூலம் கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.26 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். இதை கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் கேட்பது இல்லை.
மத்திய அரசு அநியாயம்
15-வது நிதி ஆணையம், கர்நாடகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.5 ஆயிரத்து 490 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த நிதியை மத்திய அரசு வழங்க மறுத்துவிட்டது. கர்நாடகத்திற்கு மத்திய அரசு அநியாயம் செய்து கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி நடைமுறை அமலுக்கு வந்த பிறகு நாம் பிச்சைக்காரர்களை போல் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துகிறது. சொன்னபடி வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் இதற்கு முன்பு அவர்கள் மாதந்தோறும் எவ்வளவு மின்சாரத்தை பயன்பத்தினார்களோ அதே அளவை நிர்ணயம் செய்து இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் என்ன தவறு உள்ளது?.
ஆங்கில மோகம் அதிகரிப்பு
பா.ஜனதாவினர் ஒல்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினா். அவ்வாறு அந்த தொகையை டெபாசிட் செய்தார்களா?. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறினர். வேலை வழங்கினார்களா?. பெற்றோரிடையே ஆங்கில பள்ளிகள் மீதான மோகம் அதிகரித்துவிட்டது. அதனால் கிராம பஞ்சாயத்துகள் தோறும் அரசு பப்ளிக் ஆங்கில பள்ளிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு சிவலிங்கே கவுடா பேசினார்.