சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
குவாலியர்,
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். இதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது;
மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" என எதிர்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது. பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது.
உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். என்று பிரதமர் பேசினார்.
மேலும், சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது. அன்றைக்கு ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடினார்கள். இன்றும் அதையே செய்கிறார்கள். முன்பு சாதியின் பெயரால் நாட்டைப் பிரித்தார்கள். இன்றும் அதே பாவத்தைச் செய்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மத்தியபிரதேசத்தில் அடுத்தமாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 2003-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.