மணிப்பூர் சம்பவம்: நாடாளுமன்ற வளாகத்தில் நாளை போராட்டம் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டம்


மணிப்பூர் சம்பவம்: நாடாளுமன்ற வளாகத்தில் நாளை போராட்டம் - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டம்
x

கோப்புப்படம்

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய நேர விவாதத்துக்கும், உள்துறை மந்திரி அமித்ஷா பதிலளிக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்தன. இந்த விவகாரத்தில் நேரக் கட்டுப்பாடின்றி அனைத்துக் கட்சிகளும் பேசி விவாதம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதுதொடர்பாக அமளி நீடித்ததால், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் எந்த அலுவலையும் கவனிக்காமல் முடங்கின.இந்த நிலையில், புதிதாக இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அறையில் சந்திக்கவும், நாடாளுமன்றத்தில் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் முடிவு செய்துள்ளன. அதைத்தொடர்ந்து, நாளை (திங்கட்கிழமை) இரு அவைகளிலும் நுழையும் முன்பு, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.


Next Story