மோசமடையும் காற்றுமாசு: டெல்லியில் பள்ளிகளை மூடுவதற்கு பல பெற்றோர்கள் ஆதரவு
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பள்ளிகளை மூடுவது குறித்து டெல்லியில் உள்ள பல பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக தேசிய தலைநகரின் காற்றின் தரம் 'கடுமையாக' மோசமடைந்துள்ளது.
இதன் காரணமாக தலைநகரில் காற்றின் தரம் மேம்படும் வரை பள்ளிகளை மூடுமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மாசுபாட்டை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று சில பெற்றோர்கள் டெல்லி அரசை வலியுறுத்தியுள்ளனர். டெல்லி பெற்றோர் சங்கத் தலைவர் அபராஜிதா கவுதம் கூறுகையில்,
காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படுவதால் பள்ளிகளை மூட வேண்டும் என்று பெரும்பான்மையான பெற்றோர் விரும்புகின்றனர், மேலும் நேரத்தை நீட்டிப்பதும் உதவாது என்று கூறினார்.
பள்ளி மூடல் குழந்தைகளுக்கு பிரச்சினைகளை உருவாக்கும் என்று மற்ற பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், "இவ்வளவு சீக்கிரம் பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை. ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது.
பொதுத்தேர்வுகள் நெருங்கி வருகின்றன. பள்ளிகளை மூடுவது மாணவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும்" என்று இரண்டு குழந்தைகளின் தந்தையான ரமேஷ் கூறினார்.
மற்றொருவரான சுனிதா (40) கூறுகையில், அரசு பள்ளி நேரத்தை நீட்டிக்க வேண்டும். "மாசு அதிகரித்து காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது, குழந்தைகளால் சுவாசிக்க முடியாது. குறைந்த பட்சம் அவர்கள் பள்ளி நேரத்தை தாமதப்படுத்தலாம், இதனால் குழந்தைகள் சரியாக சுவாசிக்க முடியும்", என்று அவர் கூறினார்.
பொதுத்தேர்வுகள் இருக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பள்ளிக்கு வரலாம் என்றும், மற்ற மாணவர்கள் வீட்டில் தங்கலாம் என்றும் மற்றொரு நபர் பரிந்துரைத்தனர்.