'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்


ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்
x

உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு உள்ள சூடானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை, ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மத்திய அரசு தொடங்கி உள்ளது.

உச்சக்கட்ட மோதல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் உள்நாட்டுப்போர் மூண்டு இருக்கிறது.அரசியல் நிலைத்தன்மை இல்லாத அந்த நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவத்துக்கும், பலம் பொருந்திய துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது.

தலைநகர் கார்தூம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பரவலாக இந்த சண்டை நடந்து வருகிறது. பொதுமக்கள் அடர்த்தியாக வாழும் தெருக்களில் கூட நடந்து வரும் இந்த சண்டையால் திரும்பும் திசையெல்லாம் ஆயுதங்களின் ஓசையும், அப்பாவி மக்களின் அலறலுமாக அச்சுறுத்தி வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த யுத்தத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 264 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். 3,700-க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர்.

வெளிநாட்டினர் மீட்பு

இருபெரும் ஆயுதப்படைகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதலால் சூடானில் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே அங்கு வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக சிறப்பு விமானங்கள், கப்பல்களை சூடானுக்கு அனுப்பி உள்ளன.

அந்தவகையில் உள்நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என 388 பேரை 4 விமானங்கள் மூலம் பிரான்ஸ் நாடு சூடானில் இருந்து ஜிபோட்டி நாட்டுக்கு வெளியேற்றியது. இதைப்போல ஆலந்து நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என ஏராளமானவர்களை அந்த நாட்டு விமானப்படை விமானம் நேற்று ஜோர்டானுக்கு கொண்டு சென்றது.

இந்த வரிசையில் இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஜோர்டான், கிரீஸ் என ஏராளமான ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் போர்க்கால அடிப்படையில் தங்கள் குடிமக்களை சூடானில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். அத்துடன் தங்கள் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களையும் மீட்டு வருகிறார்கள்.

இந்தியர்களை மீட்க நடவடிக்கை

உள்நாட்டுப்போரால் உருக்குலைந்து வரும் சூடானில் இந்தியர்களும் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அங்கு உள்நாட்டுப்போர் தொடங்கியதுமே இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, அவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்தது.

சூடானில் இருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக மத்திய மந்திரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கடந்த 21-ந்தேதி தீவிர ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக கடற்படை கப்பலான 'ஐ.என்.எஸ். சுமேதாவை' சூடானுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்த கப்பல் சூடான் துறைமுகத்தை அடைந்து இருக்கிறது. மேலும் விமானப்படையை சேர்ந்த சி.130ஜே ரகத்தை சேர்ந்த 2 விமானங்களை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் தயார் நிலையில் வைத்தது.

500 பேர் வெளியேற்றம்

இவ்வாறு அனைத்து தயார் நடவடிக்கைகளையும் மேற்கொண்ட மத்திய அரசு அதிரடியாக மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியது. 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் நடந்து வரும் இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு இடமாற்றி இருப்பதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'சூடானில் சிக்கித்தவிக்கும் நமது குடிமக்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' நடந்து வருகிறது. இதன் மூலம் சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்தை அடைந்துள்ளனர். மேலும் பலர் வெளியேறி வருகின்றனர். நமது கப்பல்களும், விமானங்களும் அவர்களை தாயகத்துக்கு கொண்டு வர தயாராக உள்ளன' என குறிப்பிட்டு இருந்தார்.

சூடானில் உள்ள நமது சகோதரர்கள் அனைவருக்கும் உதவ கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்து இருந்தார். சூடான் துறைமுகத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ள இந்தியர்கள், அங்கிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என தெரிகிறது.

வெளிநாடுகள் உதவி

இதற்கிடையே சூடானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு உதவுமாறு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிடமும் இந்தியா உதவி கேட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட அந்த நாடுகள், இந்தியர்களை மீட்பதற்கு உதவ முன்வந்திருந்தன. அதன்படி சூடான் தலைநகர் கார்தூமில் சிக்கியிருந்த 3 இந்தியர்களை நேற்று முன்தினம் சவுதி அரேபியா மீட்டது. இதைப்போல பிரான்ஸ் நாடு நேற்று மீட்டிருந்த 388 பேரில், இந்தியர்கள் 5 பேரும் அடங்குவார்கள் என டெல்லியில் உள்ள அந்த நாட்டு தூதரகம் தெரிவித்து உள்ளது.

இவ்வாறு இந்தியாவின் ஆபரேஷன் காவேரி திட்டம் மற்றும் வெளிநாடுகளின் உதவியால், சூடான் போர்க்களத்தில் இருந்து இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

சமீப காலத்தில் இதுபோன்ற 2 மிகப்பெரிய வெளியேற்றுதல் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, தலீபான்களின் ஆட்சிக்குள் வந்த ஆப்கானிஸ்தானில் இருந்தும், ரஷியா தொடுத்த போரால் நிலைகுலைந்த உக்ரைனில் இருந்தும் ஏராளமான இந்தியர்களை மீட்டு வந்தது.

அந்த அனுபவம் ஆபரேஷன் காவேரியை வெற்றிகரமாக நிறைவேற்ற அரசுக்கு உதவும் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story