ஆபரேசன் காவேரி; சூடானில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் ஜெட்டாவில் இருந்து இந்தியா வருகை


ஆபரேசன் காவேரி; சூடானில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் ஜெட்டாவில் இருந்து இந்தியா வருகை
x

ஆபரேசன் காவேரி பணியின்படி சூடானில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் ஜெட்டாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. எனினும், அதனையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

சூடானில் 4 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் தங்களை மீட்கும்படி அரசிடம் கோரியுள்ளனர். இதனை தொடர்ந்து, உயர்மட்ட அளவிலான அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் விமானங்கள், கப்பல்களை அனுப்ப அரசு முடிவு செய்தது.

சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பணியில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவியுடன் நேரிடையாக களத்தில் இறங்கி, தங்களது தூதர்கள் மற்றும் குடிமக்களை மீட்டன.

இதுதவிர, சூடானில் சிக்கியுள்ள ஐரோப்பிய மற்றும் கூட்டணி நாடுகளின் குடிமக்களையும் பிரான்ஸ் அரசு மீட்டது.

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்பட சகோதர மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த குடிமக்களை வெளியேற்றி இருக்கிறோம் என சவுதி அரேபியா அரசும் தெரிவித்து இருந்தது.

இதேபோன்று சூடானின் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஈராக், இந்தியா, எகிப்து, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பர்கினாபசோ, கத்தார் உள்ளிட்ட நாட்டு மக்களை சவுதி அரேபிய அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர்.

சூடானில் சிக்கி தவித்து வரும் நமது மக்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அவர்களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வருவதற்காக நம்முடைய கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன.

இதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அதன்பின், இந்தியாவின் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சுமேதா உதவியுடன் அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த சூழலில், ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றி கொண்டு இன்று மாலை புறப்பட்ட தனி விமானம் புதுடெல்லியை நோக்கி வருகிறது. அதன்பின் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைவார்கள் என மத்திய வெளிவிவகார இணை மந்திரி முரளீதரன் இன்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று இந்தியர்களை சூடானில் இருந்து ஜெட்டா நகருக்கு கொண்டு வருவதற்காக, சூடான் நாட்டின் துறைமுகத்தில் ஐ.என்.எஸ். தேக் கடற்படை கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story