இந்தியா கூட்டணியை மகிழ்விக்கவே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு மத்திய மந்திரி ஷோபா குற்றச்சாட்டு


இந்தியா கூட்டணியை மகிழ்விக்கவே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு மத்திய மந்திரி ஷோபா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணியை மகிழ்விக்கவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ஷோபா குற்றம் சாட்டியுள்ளார்.

மங்களூரு:-

காவிரி நீர்

உடுப்பியில் மத்திய மந்திரி ஷோபா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணையின் தற்போதைய நீர்மட்ட நிலவரம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா உடனே அறிக்கை வெளியிடவேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் மழை பொய்த்து போனதால் கர்நாடக அணைகள் நிரம்பவில்லை. தற்போது உள்ள நீரை வைத்துதான் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தவேண்டும். பெங்களூரு கோலார், துமகூரு, மண்டியா, மைசூரு ஆகிய நகரங்களில் வசிக்கும் மக்கள் காவிரி நீரைத்தான் குடித்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதால், இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. விவசாய நிலங்கள் வறண்டுபோய்விடும். குடிநீர் பஞ்சம் ஏற்படும். கடந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை இல்லாததால் தமிழக அரசு பொறுமை காக்கவேண்டும். கர்நாடக அரசும் இதனை எடுத்து கூறவேண்டும்.

இந்தியா கூட்டணி

ஆனால் காங்கிரஸ் அதனை செய்யவில்லை. இந்தியா கூட்டணியை மகிழ்விப்பதற்கே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடுகிறது. ஏனென்றால் அந்த கூட்டணியில் தி.மு.க. உள்ளது. மக்களைவிட இந்தியா கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலுக்குதான் காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

கர்நாடகத்தில் அரசு அறிமுகம் செய்துள்ள உத்தரவாத திட்டங்களால், வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டத்திற்கான நிதியை, உத்தரவாத திட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்தை அறிவித்துவிட்டு, அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறது. இலவச பஸ் பயணம் அறிமுகம் செய்யப்பட்டாலும் வெளியூர்களுக்கு செல்லும் 50 சதவீத பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சரியான நேரத்திற்கு பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது முக்கியம் இல்லை. பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story