ஆன்லைன் திரைப்பட விமர்சனங்கள் குறித்த வழக்கு - கேரளா ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஆன்லைன் திரைப்பட விமர்சனங்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க மத்திய அமைச்சகத்துக்கு கேரளா ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளா ஐகோர்ட்டில் ஆன்லைன் சினிமா விமர்சனங்களை கட்டுப்படுத்த கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், ஒரு திரைப்படத்தை சரியாக மதிப்பிடாமல் எதிர்மறையாக விமர்சனம் செய்கின்றார்கள். இதன் மூலம் திரைப்படத்தின் வசூல் மோசமாக பாதிக்கப்படுகின்றது. ஒரு சில நேரங்களில் ஒரு படத்தை தோல்வி படமாகவும் மாற்றுகின்றது. இது சினிமா துறையினரின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றது.
எனவே, அதற்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும். மேலும் படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து விமர்சனம் செய்ய உத்தரவிட வேண்டும், என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் திரைப்பட விமர்சகர்கள் மற்றும் சினிமா தொடர்பான சமூகவலைதள பதிவாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக்கூறிய மனு மீது விளக்கம் அளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் திரைப்பட தணிக்கை குழுவிற்கு நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.