மும்பையில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் கடலில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு; மீட்புப்பணி தீவிரம்!
இன்று பிற்பகல் 7 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பை,
மும்பையிலிருந்து அரபிக்கடல் வழியாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் அதில் பயணித்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் மிதவைகளை பயன்படுத்தி கடலில் தத்தளித்தபடி உயிர்பிழைத்தனர்.
இன்று பிற்பகல் 7 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, மும்பை ஓஎன்ஜிசி ரிக் சாகர் கிரண் அருகே அரபிக்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) தெரிவித்துள்ளது. இந்திய கடலோர காவல்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் இருந்து அரபிக்கடலில் 7 கடல் மைல் தொலைவில் விபத்து நடந்த இடம் உள்ளது. கடலோர காவல்படை விமானம் மூலம், உயிர்காக்கும் மிதவை படகுகள் வழங்கப்பட்டன.
அவர்கள் பயணித்த பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரில் 7 ஓஎன்ஜிசி பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்குவதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
கடல் மேல் பயணிக்கும் இத்தகைய ஹெலிகாப்டர்களுடன் மிதவைகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மிதவைகளைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் கடலில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.