ஒரே நாடு ஒரே தேர்தல்; 32 கட்சிகள் ஆதரவு, 15 கட்சிகள் எதிர்ப்பு - ராம்நாத் குழு அறிக்கையில் தகவல்


ஒரே நாடு ஒரே தேர்தல்; 32 கட்சிகள் ஆதரவு, 15 கட்சிகள் எதிர்ப்பு - ராம்நாத் குழு அறிக்கையில் தகவல்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 14 March 2024 5:36 PM IST (Updated: 14 March 2024 6:08 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 62 கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசு அமைத்தது.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்களை கேட்டு வந்தது. இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இன்று சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 62 கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 32 கட்சிகள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 15 கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும், 15 கட்சிகள் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய கட்சிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை இந்த திட்டத்தை எதிர்த்துள்ளன. இந்த திட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கும் எதிரானது என அந்த கட்சிகள் கூறியுள்ளன.

அதே சமயம் பா.ஜ.க. மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த திட்டம் நிதியை சேமிப்பதற்கும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவும் என்று அந்த கட்சிகள் கூறியுள்ளன.

மாநில கட்சிகளை பொறுத்தவரை தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ., நாகா மக்கள் முன்னணி, ஏ.ஐ.யு.டி.எப்., சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ஆர்), சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


Next Story