ஒணம் பம்பர் லாட்டரி: திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு அடித்தது அதிர்ஷ்டம்?
ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசு அடித்தவர்கள் நான்கு பேரும் திருப்பூரை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது
திருவனந்தபுரம்,
கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்தது.ஓணம் பம்பரின் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். 2-ம் பரிசு 1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு 50 லட்சம் வீதம் 20 பேருக்கும் வழங்கப்படுகிறது. இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் ஆகும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். மொத்தம் 10 சீரியல்களில் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருந்த நிலையில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தது. இது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் விற்பனையை விட 9 லட்சம் கூடுதலாகும்.
இந்த நிலையில் லாட்டரி பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஓணம் பம்பர் குலுக்கல் முடிவுகள் நேற்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாறில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது. அதன் எண் TE 230662 ஆகும். ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி யாரென்று உடனடியாக தெரியவில்லை. கோவையை சேர்ந்த ஒருவர் 10 லாட்டரி சீட்டு வாங்கி சென்றதாகவும், அந்த நபருக்கு தான் ரூ.25 கோடி முதல் பரிசு விழுந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதுகுறித்த உறுதியான தகவல் வெளியாகமலே இருந்தது.
இந்த நிலையில், ஓணம் லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.25 கோடி வென்றது திருப்பூரை சேர்ந்த நான்கு பேர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள செய்தி இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த பாண்டிராஜ், நடராஜன், குப்புசாமி, ராமசாமி ஆகிய 4 பேரும் கூட்டாக வாங்கிய டிக்கெட்டிற்கு தான் இந்த பரிசுத்தொகை விழுந்து இருப்பதாக கூறப்படுகிறது. நான்கு பேரும் தற்போது திருனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டை கொடுத்து பரிசுத்தொகை கோரியிருப்பதாகவும் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைத்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பரிசு விழுந்த டிக்கெட்டை பாலக்காடு வாளையாரில் கடந்த 18 ஆம் தேதி நான்கு பேரும் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ரூ.25 கோடி பரிசுத்தொகை கொண்ட ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசு அடித்தவர்களுக்கு வரி பிடித்தம் போக சுமார் 12.5 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக கிடைக்கும்.