நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் சிக்கன நடவடிக்கையால் ரூ.801 கோடி சேமிப்பு
சபாநாயகரின் சிக்கன நடவடிக்கைகளால், கடந்த 4 ஆண்டுகளில், நடப்பு 17-வது மக்களவை ரூ.801 கோடியை சேமித்துள்ளது.
பட்ஜெட் ஒதுக்கீட்டில் கால்பங்கு சேமிப்பு
நாடாளுமன்றத்தின் செலவுகளுக்கு ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்ட தொகையில், தற்போதைய 17-வது மக்களவை ரூ.801 கோடிைய சேமித்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறினார். 17-வது மக்களவை, 2019-ம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. அதன் சபாநாயகராக ஓம்பிர்லா பணியாற்றி வருகிறார்.
கடந்த 2021-2022 நிதி ஆண்டில் ரூ.258 கோடியே 47 லட்சமும், 2022-2023 நிதி ஆண்டில் ரூ.132 கோடியே 60 லட்சமும் மக்களவை சேமித்தது. மொத்தத்தில் 4 ஆண்டுகளில், ரூ.801 கோடி சேமித்துள்ளது. இது, 4 ஆண்டுகளாக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் கால்பங்கு ஆகும்.
முந்தைய மக்களவை
இதற்கு முன்பு, 13 மாதங்கள் மட்டுமே நீடித்த 12-வது மக்களவை, பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.7 கோடியே சேமித்தது. 13-வது மக்களவை (1999-2004) ரூ.99 கோடியே 52 லட்சமும், 14-வது மக்களவை (2004-2009) ரூ.145 கோடியே 7 லட்சமும், 15-வது மக்களவை (2009-2014) ரூ.94 கோடியே 17 லட்சமும், 16-வது மக்களவை (2014-2019) ரூ.461 கோடியும் சேமித்தது.
சிக்கனம்
தற்போதைய 17-வது மக்களவை அதிக தொகையை சேமித்ததற்கு கொரோனாவால் மக்களவை கூட்டங்கள் குறைக்கப்பட்டதும், சபாநாயகர் ஓம்பிர்லாவின் சிக்கன நடவடிக்கைகளுமே காரணங்கள் ஆகும்.
சபாநாயகர், மக்களவை செயலகத்தை காகித பயன்பாடற்ற அலுவலகமாக மாற்றினார். அவர் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியதால், எரிபொருள் செலவு தவிர்க்கப்பட்டது.