இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி பெருமைக்குரியது - மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம்
இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி பெருமைக்குரியது என்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
உலக அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை கொண்ட ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா அலங்கரித்து வருகிறது. இது பெருமைக்குரிய அம்சம் என நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
காலையில் அவை கூடியதும் இது தொடர்பாக மத்திய அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், '2023-ம் ஆண்டு, ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும்போது, அந்த நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களின் மாநாடும், இந்திய நாடாளுமன்ற தலைமையின் கீழ் நடக்கும். இந்திய ராஜதந்திர வரலாற்றில் இந்த மாநாடு ஒரு முக்கிய அத்தியாயமாக அமையும்' என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டின்போது நமது வளமான பன்முக கலாசார பாரம்பரியம் மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் சக்தியை இந்தியா உலகிற்கு முன்வைக்கும் என கூறிய ஓம் பிர்லா, ஒட்டுமொத்த உலகுக்கும் சிறந்த தலைமையை வெளிப்படுத்தும் என்றும் கூறினார். இந்த பெருமையை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.