மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
பேளூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். செஸ்காம் அதிகாரிகளை கண்டித்து உடலுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாசன்:-
மூதாட்டி சாவு
ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா பல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்கம்மா (வயது 67). இவர் தனக்கு சொந்தமாக பசுமாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கங்கம்மா தனது பசுமாடுகளை மேய்ச்சலுக்காக கிராமத்தையொட்டி உள்ள விளைநிலத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் அவர், பசுமாடுகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கனமழை காரணமாக அந்தப்பகுதியில் மின்வயர் ஒன்று அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் கங்கம்மா மின்வயரை மிதித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பசுமாடு ஒன்றும் மின்சாரம் தாக்கி செத்தது.
கிராம மக்கள் போராட்டம்
இதனை அறிந்ததும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். மேலும் போலீசாரும், மெஸ்காம் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அப்போது போலீசார், கங்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், கிராம மக்கள் அவரது உடலை எடுக்க விடவில்லை. அவரது உடலுடன் கிராம மக்கள் திடீரென்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், மெஸ்காம் அதிகாரிகளின் அலட்சியத்தால் கங்கம்மா உயிரிழந்துள்ளார். அந்தப்பகுதியில் மின்வயர் தாழ்வாக செல்வதாகவும், மழை பெய்வதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பு அந்த மின்வயரை அகற்ற வேண்டும் என்றும் பலமுறை மெஸ்காம் அதிகாரிகளிடம் கூறினாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கங்கம்மாவின் சாவுக்கு மெஸ்காம் அதிகாரிகள் தான் காரணம். இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் போலீசார், கங்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.