சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் முதியவர் கைது
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
முதியவர் கைது
கர்நாடகத்தில் 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்ய்ப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தேர்வு முறைகேட்டில் கைதான ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது இந்த தேர்வு முறைகேட்டில் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்த கணபதி பட் (வயது 62) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் விசாரணைக்கு ஆஜராக கணபதி பட்டிற்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்பேரில் நேற்று சி.ஐ.டி. போலீசார் முன்பு கணபதி பட்ட விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையின் முடிவில் அவருக்கு தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.
குழப்பத்தை ஏற்படுத்த....
இந்த நிலையில் கைதான கணபதி பட் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவின் நேர்முக உதவியாளர் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறும்போது, எனது அலுவலகத்தில் கணபதி பட் என்பவர் வேலை செய்கிறார்.
ஆனால் கைதானது எனது அலுவலகத்தில் வேலை செய்யும் கணபதி பட் இல்லை. இந்த விஷயத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். கணபதி பட் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக கிடைத்த தகுந்த ஆதாரத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய யாரையும் போலீசார் விடமாட்டார்கள் என்றார்.