ஆட்டோக்களை இயக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு அனுமதி- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஆட்டோக்களை இயக்க ஓலா, ஊபர்   நிறுவனங்களுக்கு அனுமதி-  கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோக்களை இயக்க கூடாது

கர்நாடகத்தில் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் வாடகை காருடன் ஆட்டோ சேவையையும் வழங்கி வருகிறது. ரேபிடோ என்ற நிறுவனம் ஆட்டோக்களையும் மட்டும் இயக்குகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை கடந்த வாரம், செல்போன் செயலி அடிப்படையில் இயங்கும் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந்த நிறுவனங்களின் ஆட்டோக்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து மாநில அரசின் போக்குவரத்துத்துறை அந்த ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது. ஆட்டோக்களை இயக்க முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும், அதற்கு முன்பு ஆட்டோக்களை இயக்க கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால் அந்த நிறுவனங்கள் வழக்கம் போல் ஆட்டோக்களை இயக்கி வருகின்றன.

பேச்சுவார்த்தை

கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறையின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. போக்குவரத்துத்துறையின் உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அந்த நிறுவனங்கள் கோரின. இந்த மனு மீது நேற்று நீதிபதி கமல் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. கர்நாடக அரசு உடனடியாக அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இதில் முடிவு எடுக்கும் வரை அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மாநில அரசு கட்டணம் குறித்து முடிவு எடுக்கும் வரை அந்த நிறுவனங்கள் கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட 10 சதவீதம் கூடுதலாக வசூலித்து கொள்ளலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.


Next Story