ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு ஓரிரு நாட்களில் கட்டணம் நிர்ணயம்


ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு ஓரிரு நாட்களில் கட்டணம் நிர்ணயம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஓலா, ஊபர் ஆட்டோக்களின் குறைந்தபட்ச கட்டணத்தை ஐகோர்ட்டு உத்தரவின்படி இன்னும் ஓரிரு நாட்களில் போக்குவரத்து துறை நிர்ணயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூருவில் ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை ஆட்டோக்களில் பயணிகளிடம் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூலித்து வந்ததால், அந்த ஆட்டோக்களின் சேவையை திடீரென்று ரத்து செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அந்த நிறுவனங்கள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், ஓலா, ஊபர் ஆட்டோக்கள் ஓடுவதற்கு அனுமதி வழங்கியதுடன், அந்த ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய அரசுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

ஓரிரு நாட்களில் கட்டணம் நிர்ணயம்

அதே நேரத்தில் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் சார்பில் அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி கட்டவும் தயார் என்றும் அந்த நிறுவனங்கள் அறிவித்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்ய போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐகோர்ட்டு விதித்த காலக்கெடு நிறைவு பெற உள்ளதால், இன்னும் ஒரிரு நாட்களில் ஓலா, ஊபர் ஆட்டோகளுக்கான குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

அதன்படி, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.30 முதல் ரூ.35 வரை குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு குறைந்த பட்ச கட்டணமாக பயணிகளிடம் இருந்து ரூ.100 வரை கட்டணத்தை ஓலா, ஊபர் ஆட்டோக்கள் வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story