பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது? - மத்திய மந்திரி பதில்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது என்பது குறித்து மத்திய மந்திரி பதில் அளித்தார்.
வாரணாசி,
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கவில்லை. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பெட்ரோலிய மந்திரி ஹர்தீப்சிங் பூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அவர் கூறியதாவது:-
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்திய எண்ணெய் கழகம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு ஏற்ப கடந்த 15 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கவில்லை.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டிய பின்னர் இவற்றின் விலை குறையும் என்று நான் நம்புகிறேன். எண்ணெய் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவை உக்ரைன் மீதான ரஷிய போருக்குப் பிறகு, உலகளாவிய எரிசக்தி விலை உயர்வுச் சுமையை நுகர்வோர் மீது ஏற்றாமல் பொறுப்புள்ள பெரு நிறுவன குடிமக்களாக செயல்பட்டன. விலைகளை ஒரே நிலையில் வைத்திருக்குமாறு நாங்கள் கூறவில்லை. அவர்கள் தாங்களே சுயமாக அதைச் செய்தனர். இதனால் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.17.40-ம், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.27.70-ம் இழப்பு ஏற்பட்டது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கவில்லை.
6 மாத காலத்தில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியும். அவற்றை ஈடுகட்டியாக வேண்டும் என்று அவர் கூறினார்.