ஒடிசா ரெயில் விபத்து: 100 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை...!


ஒடிசா ரெயில் விபத்து: 100 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை...!
x

AFP

தினத்தந்தி 6 Jun 2023 1:17 PM IST (Updated: 6 Jun 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

100 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்கள் 6 மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு உள்ளன.

புவனேஸ்வர்

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது.

இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 275பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரெயில் விபத்தில் பலியானவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

உரியச் செயல்முறைக்குப் பிறகு அனைத்து உடல்களும் தொடர்புடையவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடல்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அரசே ஏற்கும் என கூறினார்.

மொத்தத்தில், பாலசோரில் மூன்று ரயில் விபத்தில் காயமடைந்த 260 பேர், தற்போது ஒடிசா முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் சுமார் 900 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் 100 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்கள்புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை மற்றும் இங்குள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

ரெயில்வே உயர்மட்ட குழு நடத்திய முதல் கட்ட விசாரணையில், "பகனகா பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது.

திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், "விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்" என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பெரிய ரெயில் விபத்துக்கள் அனைத்தையும் ரெயில்வே உயர்மட்ட குழுதான் விசாரித்துள்ளது. தற்போதுதான் முதல் முறையாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை இன்று தொடங்கினார்கள். 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்துக்கான விடையை தேடி இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளனர்.


Next Story